ஒப்பந்த கொலைகளைச் செய்கின்றனரா இலங்கை இராணுவத்தினர்?

பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலர் செயற்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தி ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் சமீபகாலமாக நடந்த பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தின் போது முகாம்களை விட்டு வெளியேறி தமது கடமை ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்களைக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு தீவிரமான நிலை என்றும், இந்தச் செயல்களை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், இது ஆபத்தான போக்காக மாற வாய்ப்புள்ளது என்றும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் சிலர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும், மேலும் சிலர் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒப்பந்தம் மூலம் கொலைகளை செய்த பாதுகாப்பு படையினர் பலர் அண்மையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் அண்மையில் அம்பலாங்கொட பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவரைக் கொல்லச் சென்ற வேளையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், அதற்காகவே அவர்கள் ஆயுதம் ஏந்தியிருந்ததும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் குற்றச் செயல்கள் இடம்பெற்ற போது கடமையில் இருந்தமையால் அவர்களைக் கைது செய்வது மிகவும் சிரமமாக இருந்ததாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Recommended For You

About the Author: admin