இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு வருகின்ற 27ஆம் 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
கடந்த 21ஆம் திகதி சி.சிறீதரனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற தலைவர் தெரிவு போட்டியில் 47 வாக்குகள் வித்தியாசத்தில் சி.சிறீதரன் வென்று தலைவராக தெரிவாகியிருந்தார்.
செயலாளர் மற்றும் மற்றைய பதிவிகளுக்கான தெரிவுகள் வருகின்ற 27ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தலைவர் தெரிவில் தோற்ற தரப்பு செயலாளர் பதவியை கைப்பற்றி சிறீதரனை செயலற்ற தலைவராக வெளிக்காட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருவதாக அறிய முடிகின்றது.
நேற்று முந்தினம் யாழ்ப்பாணம் US விடுதியில் சாவகச்சேரி முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தலமையில் ஒரு கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இக்கூட்டத்தில் திருகோணமலையில் தோற்ற தரப்பை சேர்ந்த குகதாசனை செயலாளராக தாம் முன்மொழிவது என்ற தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
எப்படியாவது மற்றைய பதவிகளை கைப்பற்றி கட்சியின் அதிகாரத்தை தம்வசப்படுத்தி சிறீதரனை செயற்படாமல் தடுக்க வேண்டும் என்பதில் தோற்ற தரப்பு முனைப்பாக செயற்பட்டுவருதாக அறியமுடிகின்றது.
ஆனால் செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்திற்கு என்ற அடிப்படையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் முன்மொழியப்பட்டு தெரிவு செய்யப்படுவார் என்கிறது விடயமறிந்த தரப்புக்கள்.