கடந்த வருட வெள்ளப்பெருக்குக் காரணமாக கடந்த வருடத்தில் ஏற்பட்ட பயிர்களுக்கான சேதம் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
நில்வளா கங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்த விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழு இன்று (24) கூடியபோதே அதன் தலைவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
இந்த அமர்வுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், தென் மாகாண நீர்வழங்கல் சபை, மாத்தறை மாவட்ட செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
2023 ஆண்டு நில்வளா கங்கையை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நில்வளா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இயற்கையான நிலைமையா அல்லது அமைக்கப்பட்ட உப்பு நீர் தடுப்பு அணையினால் ஏற்பட்ட நிலைமையா என்பது குறித்து குழுவின் தலைவர் வினவினார்.
மக்களின் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்ட உப்பு நீர் தடுப்பணை இந்த வெள்ள நிலைமைக்கு நேரடிக் காரணம் என்பது இங்கு தெரியவந்ததுடன், வெள்ளப்பெருக்குக் காரணமாக கடந்த வருடத்தில் ஏற்பட்ட பயிர்களுக்கான சேதம் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர், மாத்தறை மாவட்ட செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
உப்பு நீர் தடுப்பு அணைக்கு மேலதிகமாக மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சி, நில்வளா கங்கையின் படுகையில் சகதி படிந்தமை, பழைய உப்பு நீர் தடுப்பணை அகற்றப்படாமையால் இரண்டு தடுப்பணைகள் உருவாகியமை மற்றும் மணல் தடுப்புக்கள் அகற்றப்படாமை போன்றவை இந்த வெள்ள சூழ்நிலைக்குக் காரணமாக அமைந்ததாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
வடிகான்களில் சகதிகள் அகற்றப்படாமை மற்றும் அவை ஒழுங்கான முறையில் பராமரிப்பதற்கு நிதி மற்றும் உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலைமையால் சரியான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தெரியவந்தது.
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தின் போது போடப்பட்ட தற்காலிக மாற்று வீதிகள் இதுவரை அகற்றப்படாமையும் வெள்ள நிலைமைக்கு வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நில்வளா பள்ளத்தாக்கில் வெள்ள நிலைமை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. மக்களைப் பாதித்துள்ள இந்த சமூகப் பிரச்சினை தொடர்பில் மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி நீர்ப்பாசனத் திணைக்களம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக ரணவக்க கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிந்திருந்ததாகவும், உப்பு நீர் தடுப்பு அணையை விட மணல் தடுப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.
மேலும் நில்வளா பாதுகாக்கப்பட்ட பகுதியில் மழைநீரை ஆற்றுக்கு வெளியேற்றும் பம்பிகளுக்குப் போதிய எரிபொருள் இன்மையும் பிரச்சினையாக அமைந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நீரை வெளியேற்றும் நிலையங்கள் புனரமைக்கப்படவில்லையென்றும் 2010 ஆம் ஆண்டு இந்த நீர் பம்பிகளின் இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதுள்ள சூழ்நிலை தொடர்பாக நடத்தப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.
மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து மண் தடுப்பை முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கான செயற்பாடுகளால் ஏற்பட்ட இடையூறுகள் அகற்றப்பட வேண்டும் என்றும், நில்வளா கங்கையில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு அதனை ஆழப்படுத்தும் பணியை நீர்ப்பாசணத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் அது பற்றிய அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், எதிர்கால நீர்த்தேவைகளை பரிசீலித்து, பழைய 5 நீர்த்தேக்கங்களை புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான அநுராத ஜயரத்ன, ஷசீந்திர ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, டலஸ் அழகப்பெரும, புத்திக பத்திரன, கருணாதாச கொடித்துவக்கு மற்றும் வீரசுமண வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.