இலங்கைக்கு ஐ.நா விடுத்துள்ள அவசரக் கோரிக்கை

‘யுக்திய’ என்று அழைக்கப்படும் நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்தி அதுகுறித்து மறுபரிசீலனை செய்து மனித உரிமைகளின் பிரகாரம் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் இராணுவத்தின் வலுவான அணுகுமுறை இருப்பதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கும் மனித உரிமைகள் உள்ளன. அவர்கள் பாகுபாடு மற்றும் களங்கம் இல்லாமல் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ தகுதியானவர்கள் என மனித உரிமைகள் பேரவை கூறியுள்ளது.

ஓரங்கட்டப்பட்ட சமூக-பொருளாதார குழுக்களில் இருந்து ஆயிரக்கணக்கான போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் இராணுவத்தால் நடத்தப்படும் கட்டாய புனர்வாழ்வு மையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.

‘யுக்திய’ எனப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் போது சித்திரவதை மற்றும் மோசமாக நடத்தப்பட்ட செயல்பாடுகள் குறித்து மனித உரிமை பேரவைக்கு முறைப்பாடுகள் அளித்துள்ளனர்.

மறுவாழ்வு என்பது தீங்கு குறைக்கும் கண்ணோட்டத்தில் செய்யப்பட வேண்டும். கட்டாய மறுவாழ்வு மையங்கள் உடனடியாக மூடப்பட்டு, வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாக அவை மாற்றப்பட வேண்டும். அதற்குப் பதிலாக தன்னார்வ புனர்வாழ்வுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு அல்லது நடவடிக்கைகள் எடுக்கப்படும் இலங்கை சட்டம் குறித்து மனித உரிமைகள் பேரவை கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin