மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸு தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவிற்கும் மாலைத்தீவிற்கும் இடையே பதற்றம் வெடித்தது.
அவர் சீனாவுக்கு ஆதரவான கொள்கையை வெளிப்படையாக பின்பற்றி வருவதாலும், இந்திய துருப்புக்கள் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று விடுத்த அறிவிப்பாலும் இருநாடுகளும் இடையிலான பதற்றம் அதிகரித்தது.
கடந்த 4 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவில் கடற்கரைகளின் அழகைப் புகழ்ந்து சமூக ஊடகங்களில் விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
இதனை மாலைத்தீவின் அமைச்சர்கள் மோசமான வார்த்தைகளில் விமர்த்தை தொடர்ந்து இருநாடுகளும் இடையிலான பதற்றம் மேலும் முற்றியதுடன், இராஜாதந்திர உறவுகளிலும் முறிவு ஏற்பட்டது.
இந்நிலையில், பிராந்திய அமைதிக்காக இந்தியாவிற்கும் மாலைத்தீவிற்கும் இடையிலான பதட்டத்தைத் தணிப்பதில் சாதகமான பங்கை வகிக்க இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உகாண்டாவில் அணிசோர நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தூதுவில் இடம்பெற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீரைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
பிராந்திய நாடுகளின் நலன் மற்றும் பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மையின் அவசியத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இதன்போது வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இன்று உகண்டாவில் சந்திக்க உள்ளதாக தெரிய வருவதுடன், இதன்போது மாலைத்தீவு விவகாரம் குறித்து கலந்துரையாடல்களை நடத்துவார் எனவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.