பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கமோ, முதலாளிமார் சம்மேளனமோ அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. அதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்க தலைவர்கள் பேச தயங்குவது ஏன் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாட்கூலி ஆயிரம் ரூபாவாகும். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக இம்மக்களின் சம்பளம் எவ்விதத்திலும் அதிகரிக்கப்படவில்லை.
சம்பள சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒரு நிலைப்பாடு இல்லாமல் மாறி மாறி வேறு விடயங்களை கூறி வருகின்றனர்.
எவ்வாறாயினும் தீர்வு கிடைக்கப்போவதில்லை. கால இழுத்தடிப்பு மாத்திரமே நடைபெற்று வருகின்றது.
அரசுடன் இணைந்து முதலாளித்துவத்தின் கூட்டு நாடகமாகவே இதை பார்க்கமுடிகிறது.
ஏனெனில் இறுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மெளனமாக உள்ளனர். முதலாளிமார் சம்மேளனம் நேரடியாகவே சம்பள அதிகரிப்பு செய்ய முடியாது என்கின்றனர்.
இவ்வாறு காலம் தாழ்த்தப்பட்டு, மக்கள் மீது சுமைக்கு மேல் சுமை சுமத்தப்பட்டு வருகின்றது.
தொழிற்சங்க தலைவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களினாலே பதவிக்கு வந்தோம் என்பதை மறந்து சர்வதேச தலைவர் நானே என புகழாரம் சூட்டிக்கொள்கின்றனர்.
இதன்மூலம் மக்களின் பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுகின்றன. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விரைவில் தீர்வு வழங்கப்படவேண்டும்.” என தெரிவித்தார்.