கூட்டமைப்பை மக்கள் நிராகரிக்கின்றார்கள்: விநாயகமூர்த்தி முரளிதரன்

தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் பதவி பட்டங்களை துறந்துவிட்டு ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எங்களுடைய பலவீனங்களை எதிரிகள் சிறந்தமுறையில் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில் இன்று தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைமைக்காரியாலயம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எமது கட்சி ஆரம்பித்து 7 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன் கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் எட்டு ஆசனங்களை பெற்றோம், அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 30 ஆயிரத்துக்கு மேற்பட் வாக்குகளை பெற்று 72 வருட வரலாற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்த பெருமையை நிரூபித்துகாட்டினோம்.

அம்பாறை மாவட்ட மக்கள் கட்சிக்கு அத்திவாரம் இட்டவர்கள், அவர்களின் நன்றியை ஒருபோதும் மறக்கமாட்டேன். அடுத்த தேர்தலில் யாருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை மத்திய குழுவாக கூடி நாங்கள் முடிவு எடுப்போம்.

அதேவேளை சிறந்த கூட்டணிகள் தமிழ் தரப்பில் இருந்து வருமாயின் அதனுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட நாம் தயாராக இருக்கின்றோம்.

இன்று எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் தேவைகளை செயற்படுத்தி வளங்களை கொண்டுவருதற்கு முயற்சிக்காமல் அங்கு மிகவும் அநாகரிகமான முறையில் கூச்சலிடுவதும் தனிப்பட்ட குரோதங்களை விவாதிப்பதற்கான களமாக பாராளுமன்றத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் நாங்கள் கட்சியை ஆரம்பித்து இன்று தனித்துவமாக செயல்பட்டு இருக்கிறோம். ஒருபோதும் மொட்டு கட்சியுடன் சேர்ந்து எதிர்காலத்தில் பயணிக்க வேண்டிய நோக்கம் இல்லை. ஜனாதிபதி உட்பட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்திருக்கிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழர்களுடைய பாரம்பரிய கட்சி, அது உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் தலைவரால் ஒருங்கிணைக்கப்பட்டு 22 ஆசனங்களை பெற்ற வரலாறுகள் இருக்கின்றன.

ஆனால் தற்போது இருக்கின்ற தலைமைத்துவங்கள் பலவீனமானவையாக உள்ளமையால் அக்கட்சி உடைந்து கொண்டிருக்கிறது, மக்களும் இன்று அக்கட்சியை நிராகரித்துக் கொண்டிருக்கின்றார்கள், அவர்களது செயற்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin