ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் செய்துக்கொள்ளப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அனுபவமற்ற ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் சிக்கலில் தள்ள முடியாது எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“நான் பொதுஜன பெரமுனவின் அங்கத்தவர். எனக்குத் தெரிந்தவரையில் தம்மிக்க பெரேராவுடன் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு உடன்படிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு பொதுஜன பெரமுன மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.‘‘ எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா முயற்சிகளை எடுத்துவரும் பின்புலத்திலேயே பிரசன்ன ரணத்துக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் தம்மிக்க பெரேராவுக்கும் இடையில் உடன்படிக்கையொன்று செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்தகாலத்தில் செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.