போராட்டத்தில் கல்விசாரா ஊழியர்கள்: பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

விரிவுரையாளர்களின் கொடுப்பனவை மாத்திரம் அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இன்று (ஜன.18) காலை முதல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கொடுப்பனவை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்கு இம்மாத முற்பகுதியில் அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியது.

இந்த கொடுப்பனவு அவர்களின் ஜனவரி மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், விரிவுரையாளர்களின் சம்பளத்தை மாத்திரம் அதிகரிப்பதற்கு கல்விசாரா ஊழியர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு முடிவுசெய்திருந்ததுடன், இன்றைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்க்கும் முகமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் போராட்டமொன்றையும் இன்று முன்னெடுத்தனர். இதனால், ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்யும் முகமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin