பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராம மட்டத்தில் நாமல் ராஜபக்சவுக்கு இருக்கும் ஆதரவு மற்றும் விருப்பம் காரணமாக அவர்கள் இந்த கோரிக்கை விடுக்க உள்ளதாக பொதுஜன பெரமுனவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் காரணமாக கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
ஏதே ஒரு வகையில் தம்மிக்க பெரேரா ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால், எதிர்க்கட்சி பலமடையும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், இது குறித்து கட்சியின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் தம்மிக்க பெரேராவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்து தொடர்பில் கொள்கை ரீதியான முடிவை கட்சி எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.