பதுளை மாவட்டத்தில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவானவர்தான் சமிந்த விஜேசிறி.
இவர் திடீரென கடந்த பாராளுமன்ற அமர்வில் தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இந்த தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பல்வேறு குழப்பமான நிலைகளை ஏற்படுத்தியிருந்தது.
சமிந்த விஜேசிறி, அரசாங்கத்தில் இணைப்போகிறார் மற்றும் 900 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டுதான் எம்.பி பதவியை துறக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், சமிந்த விஜேசிறியின் முடிவு ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தமது முடிவு குறித்து சமிந்த விஜேசிறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் பல நாட்களுக்கு முன்னரே தெரியப்படுத்தியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்,
”உண்மையில் இது அசிங்கமான வேலை. இப்படி நடந்து கொள்ளாதீர்கள். இந்தக் கூட்டணியைக் கட்டியெழுப்ப நாங்கள் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், யாருக்கும் தெரிவிக்காமல் இதுபோன்ற முடிவுகளை நீங்கள் எடுக்கும்போது நாங்கள் எப்படி முன்னேற முடியும்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
சஜித்துக்கு அமைதியாக பதிலளித்த சமிந்த விஜேசிறி, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்வதற்கான தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய காரணங்களை முன்வைக்க ஆரம்பித்தார்.
”நான் உங்களுடன் இருக்கிறேன் சார். கவனமாகப் பரிசீலித்து இந்த முடிவை எடுத்தேன். கடந்த கால சம்பவங்கள் என்னை கடுமையாக பாதித்துள்ளன. அவற்றை நினைத்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்.
உங்களுடனும் கட்சியுடனும் எனக்கு எந்த பிரச்சினையும் முரண்பாடும் இல்லை சார். ஆனால், அரசியலில் எனக்கு அதிருப்தி உள்ளது. நான் அரசாங்கத்திற்கு செல்லமாட்டேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் மாட்டேன்.
என்னை சிறிது காலம் ஓய்வில் இருக்க அனுமதியுங்கள். உங்களுக்காகவும் கட்சிக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன் சார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.” என்று சமிந்த விஜேசிறி கூறியபோது சஜித் மீண்டும் கோபமாக பதிலளித்துள்ளார்.
”என்னை ரணில் விக்ரமசிங்க என்று நினைக்க வேண்டாம். என்னை சுவரில் தள்ளிக்கொண்டு வேலை செய்ய தயாராக வேண்டாம்.
இதை அனைவருக்கும் சொல்கிறேன். உழைத்தால், நேர்மையாக உழைப்போம். இப்படியே போனால் நானும் சில முடிவுகளை எடுக்க வேண்டி வரும்.” என கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னரும் இருவருக்கும் இடையில் பல கருத்தாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், சஜித், சமிந்த விஜேசிறியின் முடிவில் திருப்தியில்லாதவாறு மீண்டும் மீண்டும் பதிலளித்துள்ளார். என்றாலும், பின்னர் சஜித், இந்த விடயத்தில் உங்கள் தனிப்பட்ட முடிவை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
அதன் பின்னரே சமிந்த விஜேசிறி, தமது இராஜினாமா அறிவிப்பை பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய சமிந்த விஜேசிறி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தனக்கு அரசியலில் தந்தையைப் போன்று உதவியதாகக் கூறி அவரைப் பாராட்டினார்.
அத்துடன், பாராளுமன்ற உரையை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ள சமிந்த விஜேசிறி, மாலையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும், அங்கு இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவதாகவும் கூறியுள்ளார்.
அவ்வாறே அன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஜித்தை வெகுவாகப் பாராட்டிய சமிந்த விஜேசிறி, எதிர்காலத்தில் மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதாகக் கூறியுள்ளார்.