இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு மாலைத்தீவு ஜனாதிபதி காலக்கெடு

மாலைத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவ பிரசன்னத்தை இந்தியா திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் தீவுப் பகுதியில் நிலைகொண்டுள்ள தமது படைகளை மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் திரும்பப் பெறுமாறு மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு முறைப்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி மாலைத்தீவில் 88 இந்திய இராணுவ வீரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் பொது கொள்கை செயலாளர் அப்துல்லா நஜிம் இப்ராஹிம், செய்தியாளர் சந்திப்பின் போது, முய்ஸு இந்தியா தனது படைகளை மார்ச் 15ஆம் திகதிக்குள் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.

“இந்திய இராணுவ வீரர்கள் மாலைத்தீவில் தங்க முடியாது. இது ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் கொள்கை மற்றும் அரசாங்க நிர்வாகத்தின் கொள்கையாகும்,” என்று அவர் கூறினார்.

மார்ச் 15ஆம் திகதிக்குள் இராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் முடிவு என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு நாடுகளும் இணைந்து உயர்மட்டக் குழுவொன்றை அமைத்துள்ளதுடன், முதலாவது சந்திப்பு இன்று காலை மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் முனு மஹாவாரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற சிறிது நேரத்திலேயே சீன சார்பு அரசியல்வாதியாகக் கருதப்படும் முய்ஸு, மாலத்தீவுகளில் இருந்து தனது இராணுவப் படைகளை அகற்றுமாறு இந்தியாவிடம் கோரியிருந்தார்.

“செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மாலைத்தீவு மக்கள் இந்தியாவிடம் கோரிக்கை வைக்க வலுவான ஆணையை வழங்கியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மாலத்தீவு மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு இந்தியா மதிப்பளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.”

இதனிடையே, இந்தியாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக மற்ற நாடுகளிலிருந்து தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான திட்டங்களை அவர் அறிவித்தார்.

இந்தியப் பெருங்கடல் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குச் சொந்தமானது அல்ல என்றும் மாலைத்தீவு “யாருடைய கொல்லைப்புறத்திலும் இல்லை” என்றும் முய்ஸு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin