மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (13) அதிகாலை 3.50 மணியளவில் நடந்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்த இந்த பேருந்தில் 28 பயணிகள் பயணித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதை அடுத்து, பேருந்து தீப்பிடித்துக்கொண்டதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீப்பிடித்து எரிந்த பேருந்தைவிட்டு வெளியே வர முடியாமல் 17 வயதான யஃபாரா தாஜ் ஃபக்ருதீன் ஹுசைனி என்ற சென்னையை சேர்ந்த சிக்கிக்கொண்டதுடன் அவருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக மலேசியாவின் அலோர் கஜா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அர்ஷத் அபு தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையைச் சேர்ந்த 49 வயதான அனிசா பேகம் ஃபக்ருதீன் உசைன் என்ற பெண் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 69 வயதான பீர் முகம்மது கன்னுதீன் ஆகியோர் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் இருவருக்கு சிறிய தீக்காயங்கள் காயங்கள் ஏற்பட்டுள்ளன.