பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை கப்பலில் அழைத்து சென்று விருந்துபசாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக கொழும்பு துறைமுகத்தை சேர்ந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதி என்ற வகையில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளோம் என அனைத்து இலங்கை பொது துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் தலைமை செயலாளர் நிரோசன் கொரகானகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“துறைமுக சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்த களியாட்ட நிகழ்வு கொழும்பு துறைமுக கப்பலில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளதை காண்பிக்கும் வீடியோக்களும் படங்களும் வெளியாகியுள்ளன.
இந்த களியாட்ட நிகழ்விற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவேண்டும்.
அகழ்வு நோக்கங்களிற்காக பயன்படுத்தப்படும் 25 பேர் மாத்திரம் பயணிக்ககூடிய ஹன்சகவ என்ற கப்பலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், துறைமுக அதிகாரசபையின் பணியாளர்கள் என 70 பேர் பயணித்துள்ளனர்” என தெரிவித்தார்.