ஐரோப்பாவில் உற்பத்தியை நிறுத்தும் டெஸ்லா

செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக கப்பல் போக்குவரத்து விநியோக சங்கிலி சீர்குலைந்துள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனம் தனது ஒரே ஐரோப்பிய மின்சாரக் கார் தொழிற்சாலையில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளது.

செங்கடல் வழியேயான போக்குவரத்தை கப்பல் நிறுவனங்கள் தவிர்ப்பதால், நீண்ட விநியோக நேரங்கள் தேவைப்படுவதாக கூறும் டெஸ்லா நிறுவனம், இதனால் கார் விநியோகச் சங்கிலியில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் அப்பகுதியில் உள்ள கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியதால் அமெரிக்க மற்றும் இங்கிலாந்தின் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. என்றாலும், கிளர்ச்சியாளர்களின் செயல்பாடுகளை கட்டுபடுத்த முடியாதுள்ளது.

“செங்கடலில் ஆயுத மோதல்கள் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான போக்குவரத்து பாதைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று இது உலகின் பல்வேறு பகுதிகளுக்கான கப்பல் போக்குவரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக பெர்லினில் உள்ள கார் உற்பத்தி ஆலையை ஜனவரி 29ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூட முடிவெடுத்துள்ளோம். மீண்டும் பெப்ரவரி 11ஆம் திகதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான செயல்பாடுகளே இடம்பெறும்.” எனவும் டெஸ்லா நிறுவனம் கூறுகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். நவம்பர் நடுப்பகுதியில் இருந்து செங்கடலில் 27 தாக்குதல்கள் நடந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹூதி குழு ஹமாஸுக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளதுடன், இஸ்ரேலுக்கு பயணிக்கும் கப்பல்களை குறிவைப்பதாகக் கூறியுள்ளது

Recommended For You

About the Author: admin