கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர், வாய்ஸ் அசிஸ்டென்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகியவை எதிர்காலத்தில் 12,000 பேரை, அதாவது 6 வீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கடந்தாண்டு அறிவித்திருந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமையன்று கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர், வாய்ஸ் அசிஸ்டென்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘AI’ தொழில்நுட்பத்துடன் இணைந்து பயணிக்கும் நோக்கிலே இந்த பணிநீக்கம் இடம்பெற்றுள்ளது.
கூகுள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்திருந்தன.
அதேபோல் இவ்வாண்டும் பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக வருடத்தின் ஆரம்பத்திலேயே அறிவித்துள்ளன.
குறிப்பாக சிராக்ஸ் (Xerox) நிறுவனம் இந்த மாதம் 23 ஆயிரம் ஊழியர்களை அதாவது 15 வீதமானோரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை, கடந்த ஜூலை 2022 முதல் உலகளாவிய பொருளாதார நிலைமைகள் மோசமடைந்து வருவதால் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க கூகுள் நிறுவனத்தை கோரியுள்ளார். இதன்போக்கிலேயே தற்போது இந்த பணிநீக்கங்கள் இடம்பெற்று வருகின்றன.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்,
“பணிநீக்கங்கள் தேவையற்றது என்று தெரிவித்துள்ளது. எங்கள் பயனர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை உருவாக்க எமது நிறுவன உறுப்பினர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கிறார்கள்.
மேலும் ஒவ்வொரு காலாண்டு பகுதியிலும் பில்லியன் பெறுமதியான தொகையினை இலாபமாக பெறுகின்றோம். எனவே எமது நிறுவன ஊழியர்களைத் தொடர்ந்தும் எங்களால் நீக்க முடியாது” என எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
இதேவேளை, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முதலீட்டாளர்களை ஈர்க்க கடந்தாண்டு 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 187% வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.