ஒருநாள் தொடர் இலங்கை வசம்

இலங்கை சுழற்பந்து நட்சத்திரம் வனிந்து ஹசரங்க மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ள நிலையில், தனது முதல் ஆட்டத்திலேயே 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போதே ஹசரங்க 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை சிம்பாப்வேயை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்தி, தொடரை 2:0 ஏன்ற கணக்கில் கைப்பற்றியது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டமானது 27 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்க 5.5 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு மொத்தமாக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஹசரங்கவின் சிறந்த பந்து வீச்சு திறன் இதுவாகும்.

23 ஆண்டுகளுக்கு முன்னர் (2001) இதே சிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கையின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் 19 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பெறப்பட்ட சிறந்த பந்து வீச்சு திறன் இதுவாகும்.

இது இவ்வாறிருக்க நேற்றைய ஆட்டத்தில் 97 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்க‍ை அணி, 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

இலங்கை சார்பில் அதிகபடியாக அணித் தலைவர் குசல் மெண்டீஸ் ஆட்டமிழக்காது 51 பந்துகளில் 66 ஓட்டங்கள‍ை எடுத்தார்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போட்டியின் ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவானதுடன், தொடரின் ஆட்டநாயகனாக ஜனித் லியனகே தெரிவினார்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்டி டி:20 தொடர் ஜனவரி 14 ஆம் திகதி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin