சிங்கப்பூரில் கடும் பாலியல் குற்றம் புரிந்து நீண்டகால சிறை தண்டனையை பெற்றும் மீண்டும் அக்குற்றச்செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அத்தகைய குற்றச்செயல்களை புரிவோருக்கு எதிராக புதிய தண்டனை விதிப்பு முறை இன்று முதல் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடுமையான பாலியல் குற்றங்கள், கடுமையான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகியோரை மையப்படுத்தியே புதிய தண்டனை விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
‘எஸ்இபிபி’ எனப்படும் பொதுமக்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு அளிப்பதற்கான தண்டனை விதிப்பு முறை குற்றவியல் நடைமுறை சட்டமூலத்தின்கீழ் அறிமுகமானது.
அதன்படி கடுங்குற்றங்களைப் புரிந்தோர் தண்டனையை நிறைவேற்றியபின் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவது நிச்சயமற்றது.
குறிப்பாக இம்முறைமை மீண்டும் அக்குற்றங்களைப் புரியும் குற்றவாளிகளுக்கே பொருந்தும்.
இதுதொடர்பில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவிக்கையில்,
“சிங்கப்பூரில் சிலர் இளம் பெண்களைக் குறிவைப்பதை அறிகிறோம். அவர்கள் பாலியல் வன்கொடுமையில்தான் ஈடுபடுகிறார்கள் என்பதில்லை. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் அவர்கள் மீண்டும் அதுபோன்ற குற்றங்களைப் புரிவதுண்டு.
தற்போது நடப்பில் இருக்கும் தண்டனை விதிப்பு முறைகள் அத்தகைய கடுங்குற்றங்கள் புரிவோரைக் கையாளப் போதுமானவை அல்ல” என தெரிவித்தார்.
கொலைக் குற்றவாளிகள், கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது, சட்டபூர்வ வயதை அடையாதோருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது போன்ற கடும் பாலியல் குற்றங்களைப் புரிந்தோர் ஆகியோர் மட்டுமே எஸ்இபிபி தண்டனை விதிப்பு முறைக்கு உட்படுத்தப்படுவர்.
எஸ்இபிபிக்குக் கீழ் ஒரு குற்றவாளி ஐந்திலிருந்து 20 ஆண்டுகள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்படலாம். அவர்களின் சிறைத் தண்டனைக் காலமும் குறைக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.