நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் தோல்வி

இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஒரு பொறிமுறையை உருவாக்காமையின் காரணமாகவே எமது நாடு பொருளாதார ரீதியாக பலமான நாடாக உருவாக முடியாத நிலையில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரித் ஹேரத் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம் மற்றும் தேசிய நீரியல் சட்டமூலம் மீது இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

எமது தந்தையர்களும் அவர்களது தந்தையர்களும் பேசிய பிரச்சினைகளையே நாமும் பேசு நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டுள்ளது. அதனால் காலனித்துவத்திற்கு பின்னர் நாம் உருவாக்க வேண்டிய நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு தெளிவான கட்டமைப்பொன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வடக்கில் சென்று இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அண்மையில் வலியுறுத்தியுள்ளார். 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்றால் நாம் அந்த விடயத்துக்குள் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக பலமான ஒரு நாட்டை கட்டியெழுப்பி உலகத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இந்தியா, சீனா உட்பட பல நாடுகள் இவ்வாறான தீர்மானமிக்க பிரச்சினைகளை கையாண்டு தீர்வுகளை கண்டதுடன், மறுபுறம் பொருளாதாரத்தையும் பலப்படுத்தினர். அதனால் எமது நாடு பொருளாதார ரீதியாக பலமடைய வேண்டும் என்றால், இனப்பிரச்சினைக்கு கட்டாயம் தீர்வை காண வேண்டும். இதற்கு தீர்வுகாணாது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

1979ஆம் ஆண்டு எமது நாட்டில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், 2009ஆம் ஆண்டுவரை இரண்டு இனங்களாக நாம் மோதிக்கொண்டோம். நாம் மோதிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளியது வேண்டுமென்றால் வேறு நாடாக இருக்கலாம். ஆனால், காலனித்துவத்துக்கு பின்னரான நாட்டை கட்டியெழுப்பும் திட்டமொன்று இல்லாமையாலேயே நாம் இந்த நிலையில் இருக்கிறோம்.” என்றார்.

Recommended For You

About the Author: admin