ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த சவால்

இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் மிலேச்சத்தனமாக, அரச பயங்கரவாதத்தின் மூலம் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்குவோம், லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளை கண்டறிவோம் என கடந்த சில வருடங்களாக அனைத்துத் தேர்தல்களின் போதும் பல்வேறு அரசியல்வாதிகள் வாக்குறுதியளித்திருந்த போதிலும், இந்த எந்தவொரு அரசியல் தலைவர்களும் லசந்த விக்ரமதுங்கவிற்கும் அன்னாரது குடும்பத்திற்கும் ஜனநாயகத்தின் பெயராலும், தமது கடமையை நிறைவேற்றவில்லை என்றும், இது வெட்கக்கேடான செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவர் தனது வாழ்நாளில், மக்களுக்கு உண்மையையும், சமூக அநீதிகளையும், உள்ளதை உள்ளவாறு வெளிக்கொணரவும் பகிரங்கப்படுத்தவும் துணிச்சலாகவும் சாதுர்யமாகவும் அஞ்சாதும் செயற்பட்டவராவார். இதன் விளைவாக அவர் தனது உயிரை தியாகம் செய்யவும் நேரிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நான் மீண்டும் மீண்டும் தற்போதைய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறேன், நீங்கள் தற்போது ஜனாதிபதி, உங்களை ஜனாதிபதியாக்கும் பயணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமான பங்களிப்புகளை வழங்கிய லசந்த விக்கிரமதுங்க அவர்களுக்கும், அவரது மனைவி உட்பட பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் கடமையை நிறைவேற்றுங்கள். லசந்தவின் கொலையாளிகள் யார் என்பது தொடர்பில் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணையை நடத்துங்கள். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துங்கள். நீதியை நிலைநாட்டுங்கள். நியாயத்தையும் நிலைநாட்டுங்கள்.

இந்நாட்டின் ஜனநாயகத்தின் தூணான சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது ஜனாதிபதியின் பொறுப்பு. லசந்தவின் கொலையாளிகள் யார் என்பதை தேடுவதற்கு தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

லசந்த விக்ரமதுங்க அவர்களது கொலையாளிகள் தொடர்பாக எமது ஆட்சியில் முறையான வழிமுறையின் கீழ், பக்கசார்பற்ற, வெளிப்படைத் தன்மை வாய்ந்த முறைமையினுள் நாம் கண்டறிவோம், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். லசந்த விக்ரமதுங்க அவர்களுக்கும், அவரது குடும்பத்தின் சகலருக்கும் நீதியை நியாயத்தை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 15 வருடங்கள் கடந்துள்ளன. அவரை நினைவு கூறும் முகமாக நேற்று (08) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

Recommended For You

About the Author: admin