யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தை மேம்படுத்தும் முகமாக வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
அவற்றின் அடிப்படையில் 10 பீடங்களாக உருவாக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினையை இந்த வருடத்திற்குள் தீர்க்க 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பூநகரி அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மத்தியில் பூநகரி நகரம் அமையப்பெற்றுள்ள நிலையில் அதனை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மூன்று மாவட்டங்களும் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டுள்ளார். நாடு முழுவதும் வரிசை யுகம் காணப்பட்டது. தற்போது அந்த நிலையில் இருந்து நாடு மீண்டெழுந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் 12இல் இருந்து தற்போது 6.5ஆக முன்னேறியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் சமூக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோனும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.