2023ஆம் ஆண்டை போன்று 2024ஆம் ஆண்டில் பொருளாதார சவால்கள் தொடரும். இந்த சவால்கள் 2027ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் தலைமையில் 2023 இல் இலங்கையின் பொருளாதாரம் முக்கியமான திருப்புமுனையை அடைந்துள்ளதாகவும் 2024 இல் பல சாதமான சூழ்நிலைகள் பொருளாதாரத்தில் உருவாகும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தினார்.
‘தற்போதைய நெருக்கடியைத் தணிக்க 2024 வரை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் இருந்து விலகுவது பாரிய பாதிப்புக்கு வழிவகுக்கும்.
பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு ஐ.எம்.எப், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்குபவர்கள் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களை நாடு நம்பியுள்ளது.
இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் இல்லாமல், எரிபொருள், உரங்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போன்ற தேவையானவற்றை இறக்குமதி செய்ய முடியாது.
2027ஆம் ஆண்டில் நாட்டின் சர்வதேச கடன்களுக்கான அணுகல் அதிகபட்சமாக 1,500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச நிதி விதிமுறைகளுக்கு இணங்குவதன் அவசியமாகும்.
இவ்வாறு பாரிய சவால்கள் இருப்பதால் இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க தியாகங்களை அனைவரும் செய்ய வேண்டியுள்ளது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து, நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த கூட்டு முயற்சிகள் அவசியமாகும்.‘‘ எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.