இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கோவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
இருப்பினும், கடந்த கோவிட் பரவலின் போது பின்பற்றிய முறையான சுகாதார நடைமுறைகளைப் மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கும் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வருடம் டெங்கு நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையான நிலை. டெங்கு நோயை அரசாங்கத்தினால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு ஒட்டுமொத்த சமூகத்தின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும்.
அத்துடன், பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உதவியுடன் சூழல் சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
தட்டம்மை நோயை ஒழித்துள்ள நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையை அடையாளங்கண்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் சுமார் 700 அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
சில காரணங்களால், தட்டம்மை நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவாக உள்ளதால் தற்போது நாட்டில் மீண்டும் தட்டம்மை நோய் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் பதிவாகிவரும் புதிய JN1 கோவிட் பிறழ்வு குறித்து இந்நாட்களில் எமது நாட்டிலும் கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். இது குறித்து சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
எவ்வாறாயினும், கடந்த கோவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.” என்று அமைச்சர் ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார்.