இந்த வருடம் 2024இல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்காக கட்டப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக 11 வீட்டுத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 06 வீடமைப்புத் திட்டங்கள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக 552 மில்லியன் சீன யுவான் (இலங்கை மதிப்பில் 22 பில்லியன் ரூபாய்) உதவியாகப் பெறப்படும். கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1996 ஆகும். இதன் நிர்மாணப் பணிகள் வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எஞ்சிய 4,500 வீடுகள் அப்பிள் வத்த கொழம்பகே மாவத்தை, பெர்கியூசன் வீதி, ஸ்டேடியம் கம, ஒபேசேகரபுர மற்றும் மாதம்பிட்டிய ஆகிய இடங்களில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 15,728 மில்லியன் ரூபாவாகும்.
இந்த திட்டம் கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 50,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நகர மறுமலர்ச்சித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக இந்த உதவித் திட்டம் 2019 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) நிதியுதவியின் கீழ் செயல்படுகிறது.
கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 23 ஆகும். வீடுகளின் எண்ணிக்கை 14,611 ஆகும். 11,269 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன.
இதனால் கொழும்பு நகரின் 116 ஏக்கர் மீள் அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைத்துள்ளது. அதற்கான புதிய முதலீட்டு திட்டங்கள் கண்டறியப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன தெரிவித்தார்.
மேலும் 3,500 வீடுகள் நடுத்தர வருமான வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும். நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்காக கட்டப்படும் இந்த வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 11 ஆகும். இந்த 11 வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அவற்றில் சில தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்த ஆண்டில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.