ஜனாதிபதியின் யாழ் விஜயம் தேர்தல் பிரச்சாரத்திற்கான முன் ஆயத்தமாகவே பார்க்கப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
வெற் வரி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய வருடத்தில் மக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்தும் விதமாய் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார இக்கட்டான நிலையில் இந்த வற் வரி அதிகரிப்பானது மக்களை பெரிதும் பாதித்துள்ளது. நாட்டு மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
வற் வரி அதிகரிப்பானது அறகலய போராட்டம் போன்று மீண்டும் ஒரு பாரிய போராட்டத்திற்கு வழிவகுக்கும்.
தற்போதைய அரசாங்கம் மக்களின் நலகை சிந்திக்காது சர்வதேச நாணய நிதியத்திற்காகவே செயற்படுகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனவரி 4 ஆம் திகதியன்று வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயம் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரமாகவே தமிழ் தரப்புக்களால் பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்திலே தீர்வு என ஜனாதிபதி தெரிவிக்கிறார். ஆனால் பாராளுமன்றிலும் தீர்வு எட்டப்படவில்லை.
2022 ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் தேர்தலுக்கென ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. ஒதுக்கப்பட்ட தொகைக்கு என்ன நேர்ந்தது என்றும் தெரியவில்லை.
தற்போது வாய் வார்த்தைகளில் ஜாலம் காட்டவே ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் மேற்கொள்கிறார். வாய் ஜாலத்தின் ஊடாக தமிழ் மக்களின் ஆதரவு பெற்றுவிட முடியும் என எண்ணுகிறார்” என தெரிவித்தார்.