பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் நடுவே தீவிரவாத அச்சுறுத்தலுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.
“பிரான்ஸ் முழுவதும் 90,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இருப்பதாகவும், பாரிஸ் நகரில் மட்டும் 6,000 பொலிஸார் களமிறக்கப்பட உள்ளனர்.
அத்துடன் 5 ஆயிரம் இராணுவ வீரர்களும் புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன நாடுகளில் நடந்துவரும் போரின் எதிரொலியாக பிரான்ஸில் தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
பாரிஸ் கோடைகால ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் உள்ளிட்டவை முன்னெடுக்க இருப்பதால் கடந்த ஆண்டை விட பாரிஸ் நகரின் தெருக்களில் அதிக மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாரிஸின் சில பகுதிகளில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்படும்”என்று பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் டார்மானின் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக இஸ்லாமியர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படும் பகுதிகளில் பொதுமக்கள் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புள்ள எந்த பொருட்களும் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் அனுமதிக்கப்படாது என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் கண்காணிப்புக்கு என மட்டும் பயன்படுத்தப்படும், பொதுமக்கள் பயயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.