44 இலங்கை கைதிகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பொது மன்னிப்பு

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் (UAE) தேசிய தினத்தை முன்னிட்டு அங்குள்ள வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 02ஆம் திகதி அனுசரிக்கப்பட்ட ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் 52வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளின் பின்னணியிலும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பைப் பெற்ற 44 இலங்கையர்களும் உரிய நேரத்தில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என அறிவிப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அவர்களைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவதை உறுதிசெய்யும்.

இலங்கையர்களுக்கு மன்னிப்பு வழங்க ஏற்பாடு செய்த ஐக்கிய அரபு அமீரக அரசு, அந்நாட்டு வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin