இலங்கை தமிழருக்கு பிரித்தானியாவின் உயரிய விருது அறிவிப்பு

பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றைக் கண்டுபிடித்த இலங்கை தமிழரான சபேசன் சிதம்பரநாதனுக்கு பிரித்தானியாவின் King’s New Year Honors விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி சபேசன் சிதம்பரநாதன், தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகள், வைத்தியசாலைகள், விமான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாரளர்கள் பயன்படுத்தும் இருப்பிட கண்காணிப்பு அமைப்பை உருவாக்கினார்.

இந்நிலையில், குறித்த விருதை பெறுவதில் “தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக” கலாநிதி சபேசன் சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த விருது “ஒட்டுமொத்த குழுவின் கடின உழைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு கிடைத்த மரியாதை ” என்றும் அவர் கூறினார்.

தங்கள் சமூகங்களுக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கிய சுமார் 105 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட சபேசன் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றுச் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு சில மாதங்கள் கல்வி பயின்றார்.

பிரித்தானியாவில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று தனது இளநிலை பொறியியற் கல்வியை 2007ஆம் ஆண்டு நிறைவு செய்து இங்கிலாந்து அளவில் தெரிவான 18 முதல் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

தனது முதுமாணிக் கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும் பேசிய அவர்,

“நான் இளவயதில் உயர்கல்வி கற்க இங்கு வந்தேன். கேம்பிரிட்ஜ் மற்றும் எனக்கு வழிகாட்டியவர்கள் இல்லையென்றால், நான் இன்று இருக்கும் இடத்தில் இருந்திருக்க முடியாது.

“நான் மிகவும் திறமையான நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். புதுமைகளை உருவாக்குவது மிகவும் உற்சாகமானது, எனினும், ஆய்வகத்திலிருந்து நிஜ உலகிற்கு ஒரு யோசனையைக் கொண்டுவருவது என்பது உண்மையான சவாலாகும்.” என்று கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin