உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் வரைபடத்தை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி மாதம் கோயில் மூலவர் பிரதிஷ்டை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமடைந்துள்ளன.
இந்நிலையில், ராமர் கோயிலின் முழு வளாகத்தின் வரைபடத்தை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. மக்கள் வசதிக்காக வரைபடம் வெளியிடுவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
வரைபடத்தில், ராமர் கோயில் வளாகம் 70 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. அதில், 70 சதவிகிதம் பசுமையாக உள்ளது. இதனால், பெரும்பகுதி தோட்டங்களாகவும், நந்தவனங்களாகவும் பராமரிக்கப்படவுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கிழக்கு வாசல் வழியே உள்ளே வரலாம். மேற்கு வாசல் வழியே வெளியேறலாம்.
சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு மட்டுமின்றி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தீயணைப்புப் பிரிவு, மின் தூக்கி உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது.
கோயில் தளங்கள் ஒவ்வொன்றும் 20 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் 392 தூண்கள் உள்ளன. 44 வாயில்கள் கொண்டுள்ளன.
கிழக்கு வாசலிலிருந்து 32 அடி எடுத்து வைத்தால், முக்கிய கோபுரத்தை அடையலாம். மாற்றுத் திறனாளிகளுக்காக வளாகத்தில் சாய்வுதளப் பாதையும், மின் தூக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கோயிலின் நான்கு மூலைகளிலும் சூரியன், பகவதி துர்காதேவி, கணேசன், சிவன் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் பின்புறம் மருத்துவ வசதியுடன் கூடிய பக்தர்களுக்கான வளாகம், கழிவறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக பேசிய அயோத்தி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய், அயோத்தி நகராட்சிக்கு கோயில் பெரும் சுமையாக இருக்காது எனக் குறிப்பிட்டார்.