Nicaragua செல்லும் எயார்பஸ் A340 எனும் விமானத்தில் மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் பயணிப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து குறித்த விமானம் பிரான்ஸின் Vatry விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறக்கப்பட்ட நிலையிலே குறித்த விமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விமானத்தில் பயணித்த இந்திய பயணிகள் உள்ளிட்ட 303 பயணிகளும் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ள 300 இந்தியர்களில் ஆதரவற்ற சிறுவர்கள் 11 பேர் உள்ளடங்குவதாக பிரான்ஸ் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பயணிகளில் 10 பேர் தஞ்சம் கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பயணிகள் அனைவரும் தடுப்புக்காவல் உத்தரவுக்கமைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த விசாரணைகள் நிறைவடைவதற்கு இன்றைய நாளை தவிர்த்து ஒரு நாள் மாத்திரமே காணப்படுகின்றது.
இந்த நிலையில், எல்லை பொலிஸாரினால் பயன்படுத்தப்படும் எட்டுநாள் தடுப்புக்காவல் உத்தரவை அவசியம் ஏற்படும் நிலையில் மேலும் எட்டு நாட்களுக்கு நீடிப்பதற்கான அதிகாரம் நீதிபதிகளுக்கு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையினை ஆராய்ந்து விரைவாக தீர்வு காண்பதாக குறிப்பிட்டுள்ளது.