சபரிமலையில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 97,000 பக்தா்கள் தரிசனம் செய்தனா். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரும், நேற்று திங்கள்கிழமை தரிசனம் செய்வதற்கு 88,000 பேரும் இணையம் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து சன்னிதானத்தைச் சென்றடையும் எருமேலி உள்ளிட்ட பாதைகளில் போக்குவரத்து விதிகளை பொலிஸார் நடைமுறைப்படுத்தினா். அதேபோல் நிலக்கல் பகுதியிலேயே போலீஸாரால் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
டிசம்பா் 23 வரையில் 25,67,691பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். சபரிமலையில் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருவதையடுத்து நேரடி அனுமதிச் சீட்டின் மூலம் ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதனை 15,000ஆக உயா்த்த கேரள உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதுகுறித்து முடிவெடுக்கவுள்ளதாக தேவஸ்வம் வாரியம் தெரிவித்தது. மேலும் கூட்ட நெரிசலைத் தடுக்கும் விதமாக டிசம்பா் 26,27 ஆகிய திகதிகளில் 64,000 பேருக்கும், 70,000 பேருக்கு மட்டுமே முறையே அனுமதி வழங்கி இணைய முன்பதிவை தேஸ்வம் வாரியம் நிறுத்தியுள்ளது.
பூஜை நேரங்களில் மாற்றம்: மண்டல பூஜையையொட்டி, பூஜை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தங்கக்கவசத்தைக் கொண்டு நடைபெறும் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை (டிச.26) சபரிமலையை சென்றடைந்ததும் மதிய பூஜை நடத்தப்பட்டு கோயில் நடை அடைக்கப்படுகிறது.
மீண்டும் வழக்கமாக மாலை 3 மணிக்கு திறப்பதற்கு பதில் மாலை 5 மணிக்கே நடை திறக்கப்படுகிறது. மாலை 5.15 மணிக்கு சரம்குத்தியில் தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் தங்கக்கவசத்தைப் பெற்றுக்கொண்டு ஐயப்பனுக்கு அலங்காரம் மேற்கொள்வா். அதன்பின்னா் தீபாராதனை காட்டப்பட்டு இரவு 11 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படுகிறது.
டிசம்பா் 27ஆம் திகதி காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை மண்டல பூஜை நடத்தப்படவுள்ளது. வழக்கமாக 11.30 மணிவரை மேற்கொள்ளப்படும்.
சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள வரும் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தா்களுக்கு குடிநீா், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் கிடைக்காமல் 12 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்க வேண்டியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இதனை அடிப்படையாகக் கொண்டு கேரள உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நாகேந்திரன், ஜி.கிரீஷ் ஆகியோா் தலைமையிலான சிறப்பு அமா்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது நீதிபதிகள், ‘தரிசனம் மேற்கொள்ள வரும் பக்தா்களுக்கு ஓய்வெடுக்கும் இடங்களில் குடிநீா், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தேவஸ்வம் வாரியம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டனா்.