ஸ்மார்ட் நாட்டை கட்டியெழுப்ப போவதாக ஜனாதிபதி தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அவர் கூறும் ஸ்மார்ட் அதிகரிப்பதிலும் விற்பதிலும் மட்டுமே உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் வகுப்பறையை வட கொழும்பு டி லாசல் கல்லூரிக்கு வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி உட்பட அரசாங்கம் மக்களுக்கு பாரிய அசௌகரியத்தையும் அழுத்தங்களையும் உருவாக்கியுள்ளது. அதில் கூடுதலான பாதிப்பு நாட்டின் பிள்ளைகளுக்கும், தாய்மாருக்கு ஏற்பட்டுள்ளது.
எவ்வித உணர்வும் இல்லாத ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேலும் மேலும் வரிச்சுமையை அதிகரித்து, நாட்டின் வளங்களை விற்பனை செய்து, நாட்டு மக்களை கொல்லாமல் கொன்று வருகிறது.
அமைச்சரவை முடிவுகள் மற்றும் சட்டத்தை மீறி மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
ஒரே வருடத்தில் மூன்று முறை மின் கட்டணத்தை அதிகரித்து விட்டு, துறைக்கு பொறுப்பான அமைச்சர் வீரனை போல் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்.
நீர் மின் உற்பத்தி அதிகளவான மட்டத்தில் இருப்பதால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பில்லியன் கணக்கில் லாபம் பெற்று வரும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தை அரசாங்கம் விற்பனை செய்ய தயாராகி வருகிறது.
இதன் காரணமாக ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.