மக்களை ஏமாற்ற புதிய நாடகம் : நம்ப வேண்டாமென அடித்துக்கூறும் சஜித்

நாட்டின் வாழ்வாதாரம் சீர்குலைந்து, பொருளாதாரம் வங்குரோத்தாகியுள்ள இந்நேரத்தில்,சில தரப்பு ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரித்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 55 ஆவது கட்டமாக நுகேகொடை புனித ஜோசப் மகளிர் கல்லூரிக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (21) கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வற் வரியை அதிகரிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது நாட்டை வங்குரோத்தடையச் செய்த குடும்ப ஆட்சியின் ஒரு தரப்பினர் அதற்கு வாக்களிக்காமல்,மக்கள் பக்கம் முன் நிற்பதாக பாசாங்கு செய்தாலும்,தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்கள் வற் வரியை அதிகரிக்க ஆதரவாக வாக்களித்தனர்.

நாட்டையே வங்குரோத்தாக்கி, நாசமாக்கிய இவர்கள் ஏமாற்றுத் தனமான செயற்பாடுகள் மூலம் மக்கள் அவதானங்களை திசை திருப்ப மீண்டும் முயற்சித்து வருகின்றனர். இவர்களின் இந்த போலியான செயற்பாடுகளை கண்டு ஏமாற வேண்டாம்.

ராஜபக்ச குடும்ப ஆட்சி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான வழக்கை ஐக்கிய மக்கள் சக்தியே தொடுத்தது.

ஏனைய கட்சிகள் போல் கோப்புகளை காட்டி போலி நாடகங்களை அரங்கேற்றவில்லை. இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இந்த வழக்கின் காரணத்தின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றத்தின் உதவியை நாடலாம். இதற்கான வழியை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது.

நாட்டை வங்குரோத்தாக்கிய இவர்களுக்கு வரிச்சுமை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. இதுபோன்ற மோசடிக்கார நபர்களின் கதைகளை நம்பி ஏமாறாதீர்கள். நாட்டையே அழித்த இந்தக் குடும்பத்தை மையப்படுத்தி ஊழலை ஒழிப்பு வரி விதிக்கப்பட வேண்டும்.

இந்நாடு முதலாளித்துவ மேட்டுக் குடி வர்க்கத்திற்கு மட்டும் உரிய நாடு அல்ல. 220 இலட்சம் மக்களுக்கும் சொந்தமான நாடு. நாட்டின் எதிர்காலமாக விளங்கும் நாட்டின் பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது போலவே ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கும் உண்டு.

பாடசாலை மாணவர்கள் சாப்பிடாமல் மயங்கி விழுந்தாலும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சாப்பிடாமல் மயங்கி விழுவதில்லை என்றும், பாடசாலை மாணவர்கள் இவ்வாறானதொரு அவல நிலைக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில், மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராலும் இதனை புறக்கணிக்க முடியாது” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin