கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நூறு நாட்களை எட்டவுள்ள நிலையில் 100ஆவது நாளில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேய்ச்சல் தரைகளை மீட்டு தருமாறு தெரிவித்து மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நாளை மறுதினம் 23 ஆம் திகதியுடன் நூறு நாட்களை எட்டவுள்ளது.
இந்நிலையில், தமது நியாயமான கோரிக்கைகளுக்கான தீர்வுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பின் தலைவர் சீ.நிமலன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமது கோரிக்கைகள் குறித்து மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளோம். ஆனால், இதுவரையில் ஒரு கடிதத்திற்குகூட பதில் வழங்கப்படவில்லை.
எங்களுடைய மேய்ச்சல் தரை பிறிதொரு தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ கண்டுக்கொள்ளவில்லை.
எனவேதான் பாரிய போராட்டமொன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புகள், அரசியல்வாதிகள்,பொது அமைப்புகள்,விவசாய அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள்,மதத்தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.” என தெரிவித்தார்.