பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை எமது கூட்டணியில் இருந்து பிரிப்பதற்கு ஜனாதிபதி சதித் திட்டம் தீட்டி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது,
சுதந்திர மக்கள் காங்கிரஸின் 13 உறுப்பினர்களும் ஒன்றாக பிரசன்னமாகியிருப்பதை கண்டு ஜனாதிபதி அஞ்சுகிறார். இதனால் சுதந்திர மக்கள் காங்கிரஸை பிளவுபடுத்த ஜனாதிபதி முயற்சிக்கிறார்.
தமது கூட்டணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும், அரசாங்கத்தை அகற்றுவதற்கு எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட தயாராகவே உள்ளோம்.” எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க உள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் அறிவித்திருந்தார். ஆனால், சுதந்திர மக்கள் காங்கிரஸுக்குள் இருவிதமான நிலைபாடுகள் உள்ளன.
உருவாக்கப்படும் கூட்டணியில் பிரதித் தலைவர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க வேண்டுமென டலஸ் தரப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கடந்தவாரம் கோரிக்கை விடுத்திருந்தது.
என்றாலும், சஜித் பிரேமதாச இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இதனால் டலஸ் தரப்பு சஜித் மீது அதிருப்தியில் உள்ளது.
என்றாலும், ஜீ.எல்.பீரிஸ் சஜித்துடன் சுமூகமான உறவை கொண்டுள்ளதால் அவர் எதிர்க்கட்சித் தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியில் இணைந்து பணியாற்றும் தீர்மானத்தில் உள்ளார்.
இவ்வாறான பின்புலத்திலேயே டலஸை தமது தரப்பிடமிருந்து பிரிப்பதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.