சர்ச்சையையில் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஜெட் பயணம்

பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது பாரியாருடன் ஜெட் விமானத்தில் பயணிக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவொன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இதன்படி, அவர் தனியார் ஜெட் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார் எனவும், இது போன்ற செலவுகளுக்கு வரவு-செலவு ஒதுக்கீட்டு நிதியைப் பயன்படுத்துவது பற்றிய கவலையை எழுப்புகிறது என்பதையும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவின் புது டெல்லியில், டெஹ்ராடூனில் உள்ள இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் அதிகாரிகளின் விடுகை அணிவகுப்பில், கல்வியற் கல்லூரியின் தளபதி லெப்டினன் ஜெனரல் விஜயகுமார் மிஸ்ராவின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொண்டிருந்த நிகழ்வு குறித்தே சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன் உண்மைத்தன்மையை இலங்கை பதிரிகை ஸ்தாபனத்தின் factseeker உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் இந்த விஜயம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நளின் ஹேரத்திடம் வினவியுள்ள நிலையில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பயணித்தது எயார் இந்தியா விமானத்தில் என்பதுடன், டெல்லியில் இருந்து டெஹ்ராடூனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரிக்கு பயணித்ததும் இந்திய விமானப்படையின் விசேட ஜெட் விமானத்தில் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பயணத்திற்காக இலங்கை அரசாங்கம் எந்தவொரு செலவையும் செய்யவில்லை எனவும், முற்றுமுழுதாக இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் இந்திய பாதுகாப்புப்படையின் செலவிலேயே இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நளின் ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் அதிகாரிகளின் விடுகை அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் என்பதை இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியின் அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, இலங்கை மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா விமான பயணத்தை மேற்கொண்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பது உறுதியாகியுள்ளது.

ஜெனரல் ஷவேந்திர சில்வா சிறப்பு ஜெட் விமானத்தில் பயணம் செய்ததை சமூக ஊடக பதிவுகள் சரியாக அடையாளம் காட்டினாலும், இந்த பயணத்திற்காக பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறுவது தவறானது.

இதன்படி, இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியின் விடுகை அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக இந்திய விமானப்படையால் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதே உண்மையாகும்.

Recommended For You

About the Author: admin