தலைமை பதவிக்கு மும்முனைப் போட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அடுத்த ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்படுபவர் கூட்டமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மூன்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் அந்த பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

எனினும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் தலைமைப் பதவிக்கு வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த மாதம் வவுனியாவில் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழமையாக தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு என்பது கட்சியின் மத்திய சபையாலேயே தீர்மானிக்கப்படும்.

எனினும், இம்முறை மத்தியசபையில் பரிந்துரை செய்யப்படும் வேட்பாளர்கள் பொதுச் சபையின் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்சியின் பொதுச் சபையில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தலைவர் பதவிக்கான போட்டியில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோருக்கு சம ஆதரவு இருப்பதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள இருவரும் தீவிரம் காட்டிவருவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin