இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தலைமையகம் ஒன்றை இலங்கையில் அமைக்க பிராந்திய நாடுகள் தீர்மானித்துள்ளன.
மொரிசியஸ் தீவில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பிரகடனமும் இதன் போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா,தெற்காசியா பிராந்தியத்தின் பெருங்கடலில் உள்ள நாடுகள் மற்றும் தெற்கு ஆபிரிக்க நாடகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டனர்.
இலங்கையின் சார்பில் கலந்துக்கொண்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க மேற்படி யோசனையை முன்வைத்துள்ளதுடன் மாநாட்டில் அதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையை மையமாக கொண்டு முன்னெடுக்கப்பட உள்ளன.
இந்த நிலையில்,இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தலைமையகம் எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட உள்ளது.
இதன் பின்னர் தனியான இடம் ஒன்றுக்கு அது மாற்றப்பட உள்ளது.