சுவிஸில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர்கள்: அதிகாரிகள் அடித்ததால் பலத்த காயம்

கடந்த மாதம் சுவிட்ஸர்லாந்தில் இருந்து இலங்கை தமிழர்கள் நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மீது சுவிஸ் அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடத்தலின் போது அதிகாரிகள் அடித்ததால் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை வலையமைப்பு தெரிவித்துள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் புலம்பெயர்வுக்கான மாநில செயலகத்தின் நடவடிக்கைகள் “முற்றிலும் மனிதாபிமானமற்றது” என்று நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதனை தன்னால் நம்ப முடியவில்லை எனவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவர் எங்கிஸ்டீனில் உள்ள புகலிட முகாமில் இருந்து எதுவும் அறிவிக்கப்படாமல் பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சூரிச் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் இலங்கைக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, சுவிஸ் தடுப்புக்காவலில் பல தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது மூன்று இறப்புகள் இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நகுலேஸ்வரன் விஜயன் சுவிஸ் காவலில் வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல், 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நேசராசா ராசநாயகம் என்பவர் சுவிட்ஸர்லாந்தின் கம்பெலன் முகாமில் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை.

அவரது மரணம் குறித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களின் கோரிக்கைகளை மீறி, அவரது உடல் சுவிட்ஸர்லாந்தில் தகனம் செய்யப்பட்டது.

இதேவேளை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்கின்ற போதிலும் வெளிநாடுகளில் இருந்து தமிழர்கள் நாடுகடத்தப்படுவது தொடர்கின்றது.

கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் தமிழர் இளைஞர் ஒருவர் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நிலையில், உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து “இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்தின் தூதுவர் கவலை வெளியிட்டிருந்தார்” என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin