எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது சராசரியாக 15,700,000 ரோபாவினை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெட் வரி 18 வீதமாக அதிகரிக்கப்படுவதன் மூலம் இறக்குமதியில் போது பேருந்து ஒன்றுக்கு குறைந்தபட்சம் மேலும் 2 மில்லியன் ரூபா அதிகரிப்பு ஏற்படும் என கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிமையாளர்களினால் குறித்த விலையில் பேருந்தை கொள்வனவு செய்து பொதுமக்களை ஏற்றிச் செல்ல முடியவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உதிரிப்பாகங்களின் விலைகள், எரிபொருள் மற்றும் சேவைக்கட்டணம் என்பனவும் அதிகரிக்கும் என கெமுனு விஜேரத்ன
குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளுக்கு வெட் வரி விதிக்கப்பட்டுள்ளதால் டீசல் விலை அதிகரிக்கும் எனவும், இதன் காரணமாக மீண்டும் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.