கொழும்பில் வாழும் மக்களின் தகவல்களை திரட்டும் நோக்கில் பொலிஸாரால் விநியோகிக்கப்படும் நோட்டீஸில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
”தொகை மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களம் வீடு வீடாகச் சென்று தகவல்களை திரட்டி வருகின்றனர்.
அவர்கள் சிவில் அதிகாரிகளாகும். மூன்று மொழிகளிலும் நோட்டீஸை கொண்டுவருகின்றனர். அந்தப் பணியை பொலிஸாரை செய்ய வேண்டாமென கூறுகிறோம்.
இந்த ஆண்டில் நூற்றுக்கும் அதிகமாக துப்பாக்கிக்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸார் அதனை விசாரணை செய்ய வேண்டும்.
அமைச்சர் டிரான் அலஸ், குறித்த பணிகளை செய்வற்கான உத்தரவுகளை பொலிஸாருக்கு விடுக்க வேண்டும். மாறாக தகவல் திரட்டும் பணியை அல்ல. அதனை தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் செய்யட்டும்.
இவ்வாறு தகவல்களை திரட்ட பொலிஸார் விநியோகிக்கும் நோட்டீஸில்கூட தமிழ் இல்லை. இந்த நாட்டின் அரச மொழியாக தமிழ், சிங்களம் ஆகிய மொழிகள் உள்ளன. அதனை பின்பற்ற வேண்டுமென டிரான் அலஸ் மற்றும் தென்னகோனின் பொலிஸிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.