நீதிபதி இடமாற்றம் நுவரெலியாவில் போராட்டம்

நுவரெலியா நீதிவான் திருமதி குஷிகா குமாரசிறி எதிர்வரும் 01.01.2024 முதல் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலதிக பதில் மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா பிரதான நகரின் பொது மக்கள் ,வியாபாரிகள் , விவசாயிகள் என பலரும் இணைந்து புதன்கிழமை (13) காலை நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் திறமையின்மையினால் வழக்குகள் தாமதப்படுவதாக நீதவான் குற்றம் சுமத்தியதையடுத்து, நவம்பர் 06ஆம் திகதி நீதிவானின் பணிப்புரைக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் நீதிமன்ற கடமைகளில் இருந்து வெளியேறினர்.

இதனால் நுவரெலியா நீதிவான் திருமதி குஷிகா குமாரசிறிக்கு தண்டனையின் அடிப்படையில் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலதிக பதில் மாவட்ட நீதிபதியாக நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நுவரெலியா நீதிமன்றத்தின் வளர்ச்சியில் கூடிய கவனம் செலுத்தி தவறுகள் குறித்து உரிய தண்டனை வழங்கி பொதுமக்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்தும் நீதிவான் குஷிகா குமாரசிறியை இடமாற்றம் செய்வதை தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் நீதிபதியை தொடர்ந்தும் நுவரெலியா நீதிமன்றத்தில் கடமையாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதியின் இடமாற்றம் உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரி எதிரான வசனங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்

Recommended For You

About the Author: admin