களத்தில் தாக்குதல்: துருக்கி கால்பந்து கழக தலைவர் கைது

நடுவர் மீது தாக்குதல் நடத்திய துருக்கியில் MKE Ankaragucu கால்பந்து கழகத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

MKE Ankaragucuவின் தலைவர் ஃபாரூக் கோகா ஆடுகளத்திற்கு ஓடி வந்து போட்டி அதிகாரியான ஹலீல் உமுட் மெலரை தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த நடுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோகாவுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து அனைத்து துருக்கிய லீக் கால்பந்து போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும், “விளையாட்டிலோ அல்லது சமூகத்திலோ வன்முறைக்கு இடமில்லை” என்று ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.

“போட்டி அதிகாரிகள் இல்லாமல் கால்பந்து இல்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தெடர்பான விசாரணையை அடுத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை தொடர்ந்து MKE Ankaragucuவின் தலைவர் பதவியில் இருந்து ஃபாரூக் கோகா விலகியுள்ளதாக கூறப்படுகின்றது.

தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

“எவ்வளவு பெரிய அநீதி அல்லது எவ்வளவு தவறாக இருந்தாலும், நான் செய்த வன்முறையை நியாயப்படுத்தவோ அல்லது விளக்கவோ முடியாது” என்று கோகா கூறினார்.

இதற்காக அனைத்து தரப்பினர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin