ஜெர்மனியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி குற்றச்சாட்டு

ஜெர்மனியின் ஜனநாயக அரசியல் அமைப்பை கவிழ்க்க திட்டமிட்டதாக 27 பேர் மீது வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சந்தேக நபர்கள் ரீச்ஸ்பர்கர் – அல்லது ரீச்சின் குடிமக்கள் – இயக்கத்தின் உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

“குழுவின் உறுப்பினர்கள் அரச நிறுவனங்களையும் சுதந்திரமான ஜனநாயக அரசியலமைப்பு ஒழுங்கையும் கடுமையாக நிராகரித்தனர்” என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பெரும்பாலும் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ரீச்ஸ்பர்கர் பிரமுகரான ஹென்ரிச் XIII இளவரசர் ரியஸின் கூட்டாளிகள் என கூறப்படுகின்றது.

2021 கோடையில் ஆட்சிக்கவிழ்ப்புக்கான உறுதியான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக வழக்குரைஞர்கள் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜெர்மனியின் பாராளுமன்றமான Bundestag மீது ஆயுதம் ஏந்திய ஒரு சிறிய குழுவுடன் படையெடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவது இவர்களின் திட்டமாக இருந்துள்ளது.

அத்துடன், சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று கூறப்பட்டவர்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு தங்கள் புதிய அரசு எவ்வாறு செயல்படும் என்பதை ஏற்கனவே தீர்மானித்திருந்தனர்.

இளவரசர் ரியஸ் நாட்டின் தலைவராக திட்டமிடப்பட்டார். பதவியேற்றவுடன், இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளுடன் சமாதான உடன்படிக்கைக்கு அவர் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தார்.

வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆதரவைப் பெற இளவரசர் ரியஸ் ரஷ்ய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்க முடிவு செய்திருந்தார்.

தீவிர வலதுசாரிக் கட்சிக்கான Bundestag இன் உறுப்பினராக இருந்த Birgit Malsack-Winkemann நீதி அமைச்சராக இருந்திருப்பார். மற்ற சதிகாரர்களுக்கு அவர் பாராளுமன்ற கட்டிடங்களுக்கு அனுமதி அளித்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

கிளர்ச்சியாளர்கள் படைவீரர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

அந்தக் குழு எதிரிகளின் பட்டியலைத் தயாரித்திருந்தது. குற்றப்பத்திரிகையின்படி, தங்கள் திட்டங்களால் மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை உறுப்பினர்கள் அறிந்திருந்தனர்.

உறுப்பினர்கள் இரகசிய காப்புப் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். அதனை மீறுபவர்கள் தேசத்துரோகத்திற்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள்.

சந்தேகத்திற்குரிய சதிகாரர்களிடம் சுமார் 380 துப்பாக்கிகள் மற்றும் 148,000 தோட்டாக்கள் இருந்தன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் கடந்த டிசம்பரில் பெடரல் பொலிஸ் சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

ஜெர்மனியின் உள்நாட்டு உளவு நிறுவனமான அரசியலமைப்புப் பாதுகாப்பிற்கான அலுவலகத்தின்படி, நாட்டில் ரீச்ஸ்பெர்கர் இயக்கத்தைப் பின்பற்றுபவர்கள் சுமார் 23,000 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: admin