ஜப்பானை வீழ்த்திய இளம் சிங்கங்கள்

இளையோர் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (09) ஜப்பானை எதிர்கொண்ட இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருப்பதோடு, தொடரினையும் வெற்றியுடன் ஆரம்பம் செய்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இளையோர் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதில் குழு B அணிகளில் ஒன்றான இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி தமது முதல் போட்டியில் இன்று ஜப்பானை துபாய் நகரில் எதிர் கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணித்தலைவர் சினேத் ஜயவர்தன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஜப்பான் வீரர்களுக்கு வழங்கியிருந்தார்.

இதன்படி போட்டியில் முதலில் ஆடிய ஜப்பான் வீரர்கள் இலங்கை வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 30.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர். ஜப்பான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சார்ளஸ் ஹின்சே 36 ஓட்டங்களை எடுத்தார்.

இலங்கை பந்துவீச்சில் மல்ஷா தருப்பதி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், கருக்கே சன்கேத் 02 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட மிகவும் சவால் குறைந்த 76 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட அணியானது வெறும் 12.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்த வீரர்களில் அணித்தலைவர் சினேத் ஜயவர்தன 26 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin