ஆதித்யா எல்1 எடுத்த முழு வட்ட புகைப்படங்கள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் முழு வட்ட புகைப்படங்களைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன்மூலம் என்ன பயன்? சூரியனை புரிந்துகொள்ள இது எப்படி உதவுகிறது?

ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருந்த புற ஊதா கதிர்கள் மூலம் இயங்கக்கூடிய SUIT எனப்படும் தொலைநோக்கி உலகிலேயே முதல் முறையாக இந்தப் புகைப்படங்களை சூரியனுக்கு 200 முதல் 400 நேனோமீட்டர் அலைநீள அளவிற்கு அருகே சென்று படம் பிடித்துள்ளது.

இந்தப் புகைப்படங்கள் மூலம் சூரியனின் ஒளிமண்டலம் (Photosphere), புற வளிமண்டலம் (Chromosphere) ஆகிய மேற்பரப்புகள் பற்றி நுண்ணிய தகவல்களைப் பெற முடியும்.

ஆதித்யா எல்1 நிகழ்த்தியுள்ள இந்தக் கண்டுபிடிப்பில் சாதனையாகக் கருதப்படுவது, சூரியனில் இருந்து வெளிப்படக்கூடிய புற ஊதா கதிர்களுக்கு அருகே சென்று இந்தப் புகைப்படங்களை SUIT என அழைக்கப்படும் சூரிய புற ஊதா தோற்றுருவாக்கல் தொலைநோக்கி (Solar Ultra Violet Imaging Telescope) படம் பிடித்துள்ளது.

இந்தப் புகைப்படங்கள் மூலம் இரண்டு சிக்கலான ஆய்வுகளுக்கு உதவக்கூடிய கூடுதல் தகவல்களைப் பெற முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஒன்று, சூரியனின் மேற்பரப்பு நாம் அணுப்பக்கூடிய விண்கலம் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை ஆராய்வது. இரண்டாவது, சூரியக் கதிர்கள் பூமியின் காலநிலை மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை உன்னிப்பாக ஆராய்ந்து அதைக் கட்டுப்படுத்துவது.

முழு வட்ட புகைப்படங்கள் என்றால் என்ன?
புற ஊதா கதிர்களில் இயங்கக்கூடிய இந்த வகை தொலைநோக்கிளைப் பயன்படுத்தி இரண்டு விதமாக சூரியனை படம் பிடிக்க முடியும் என்று கூறுகிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

சூரியனில் குறிப்பிட்ட ஓர் இடத்தை ஆழமாகப் படம் பிடிப்பது அதில் ஒருவகை. மற்றொன்று, பல்வேறு வடிகட்டிகள் மூலம் சூரியனை படம் பிடிப்பது என்று அவர் விளக்கினார்.

“தற்போது சூரியனின் ஒளிமண்டலம், புற வளிமண்டலம் ஆகிய அடுக்குகளை இந்தத் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. இதன் மூலம் அந்த அடுக்குகளில் நடக்கும் நிகழ்வுகளை நம்மால் பார்க்க முடியும்.”

அவர் மேலும் கூறுகையில், “இந்த அடுக்குகளின் புகைப்படங்களை ஆராய்வதன் மூலம் சூரியனின் இந்த அடுக்குகளில் எங்கே கருப்புப் புள்ளிகள் உள்ளன, எங்கே தீப்பிழம்புகள் உள்ளன, எந்த இடங்கள் அமைதியாக உள்ளன போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்,” எனத் தெரிவித்தார்.

இந்த தொலைநோக்கி மூலம் பதினொரு வகையான ஃபில்டர் (Filter) என்றழைக்கப்படும் வடிகட்டிகளை பயன்படுத்தி சூரியனை படமெடுத்துள்ளதாக த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

சூரியனின் இந்த முழுவட்ட புகைப்படங்களை படம் பிடித்துள்ள SUIT தொலைநோக்கி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது இதில் சிறப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த தொலைநோக்கியானது மகாராஷ்ட்டிரா மாநிலம் பூனேவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விண்வெளி நிறுவனத்தின் தலைமையில் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட கருவியாகும்.

இந்தக் கூட்டு முயற்சியில், இஸ்ரோ, மணிபால் உயர்கல்வி நிறுவனம் (MAHE), கொல்கத்தாவை சேர்ந்த இந்திய விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (CESSI), பெங்களூருவில் உள்ள வான் இயற்பியல் நிறுவனம் மற்றும் உதய்ப்பூர் சூரிய கண்கானிப்பகம் (USO-PRL) மற்றும் அசாமில் உள்ள டெஸ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

இந்தத் தொலைநோக்கி குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், “இந்தியாவின் சொந்த தயாரிப்பான இந்த SUIT தொலைநோக்கி சிறப்பாகச் செயல்படுகிறது. அதற்கு இந்த தொலைநோக்கி அனுப்பியுள்ள இந்தப் புகைப்படங்களே சாட்சி,” என்றார்

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த 2ஆம் தேதி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த டிசம்பர் 6ஆம் தேதி SUIT தொலைநோக்கி சூரியனின் ஒளிப்படத்தை வெளியிட்டது.

இந்தத் தொலைநோக்கி கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி செயல்படத் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக புகைப்படங்களை அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கினார்.

“இந்த விண்கலத்தின் நோக்கமே சூரியனை ஆராய்வதுதான். தற்போது இந்தப் புகைப்படங்கள் சூரியன் குறித்த ஆராய்ச்சிகளுக்கு உதவும்.

தற்போது கிடைத்துள்ள இந்தப் புகைப்படங்களை வைத்து சூரியனின் காந்தப்புலம் மற்றும் சூரியனின் வளிமண்டலம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்,” என்கிறார் அவர்

ஆனால், தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் மட்டுமே அதற்குப் போதாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த புகைப்படங்களை வைத்து நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது. இதுபோல இன்னும் பல புகைப்படங்கள் நமக்குத் தேவை. அதை வைத்துதான் சூரியனுடைய இயக்கத்தைப் பற்றி ஆழமாகப் தெரிந்துகொள்ள முடியும்,” எனத் தெரிவித்தார்.

“இந்த SUIT தொலைநோக்கியைப் போல ஆதித்யா எல்1-இல் இருக்கக்கூடிய மற்ற கருவிகள் வரும் நாட்களில் பயன்படுத்தப்படும்.

அடுத்ததாக Plasma Analyser Package for Aditya (PAPA) எனப்படும் கருவி நிலைநின்ற பிறகு ஜனவரி 7 முதல் 15ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்படும். அந்தக் கருவியில் இருந்தும் நமக்கு அடுத்தகட்ட தகவல்கள் கிடைக்கும்.”

Recommended For You

About the Author: admin