இஸ்ரேலை போரை நிறுத்துமாறு கோரும் முஸ்லிம் தலைமைகள் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி
இன்று பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம். காரணம் அப்பாவிப் பொது மக்கள் அழிக்கப்படுகின்றனர். இதனை உலகின் பல தரப்பட்ட பிரிவினரும் அமைப்புக்களும் கண்டித்துள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைப் பாராளுமன்றத்தில் முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர் அதனை நாமும் வரவேற்கின்றோம். ஆனால் 2009 ஆண்டுக்கு முன் ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த இதே முஸ்லிம் தலைவர்கள் வடக்கில் வன்னி மாவட்டத்தில் கொத்துக் கொத்தாக அப்பாவி சகோதர ஒரே மொழி பேசும் தமிழர்கள் கொல்லப்படும் போது கண்டும் காணாதவர்கள் போல இருந்தது மாத்திரமல்ல போரை நடாத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியதை நினைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மனவேதனை அடைந்தனர்.
இன்று இஸ்ரேல் காசாவில் குண்டு போட்டு குழந்தைகள் பெரியவர்கள் என அப்பாவி மக்களை அழிப்பது போன்று தான் அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்வரை இஸ்ரேல் விமானங்களும் விமானிகளும் ராஜபக்சாக்களின் ஏவலில் செஞ்சோலை மாணவிகள் , வைத்தியசாலைகள், தற்காலிக மக்களின் முகாம்கள் , சிறுவர் இல்லங்கள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் போன்றோரை அழிக்கும் போது அன்று இதே பாராளுமன்றத்துக்குள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைச்சரவையில் ஆதரவு வழங்கியதை பாதிக்கப்பட்ட சகோதர தமிழ் மக்கள் இலகுவில் மறக்கமுடியாது மனம் குமுறுகின்றனர் .
இன்று தொலைவில் உள்ள நாடுகளிடம் பலஸ்தீ்ன மக்களை காப்பாற்றுமாறு நீங்கள் கோருவதை எவ்வளவு தூரம் செவி சாய்ப்பார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும் அன்று உங்கள் ஆதரவுடன் இருந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கபினட் அமைச்சர்களாக இருந்த உங்களால் மிக இலகுவாக கொல்லப்பட்ட அனைவரையும் காப்பாற்ற முடியா விட்டாலும் இன்று காசா மீது காட்டும் மனிதாவி மானத்தை ஈழத் தமிழர்களுக்கும் காட்டியதாக வரலாறு பதிவு செய்திருக்கும் இவ்வாறான பாரபட்சமான நிலைப்பாட்டை வரலாறு இலகுவில் மன்னிப்பதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.