கீரிமலை நகுலேஷ்வரா ம.வி. இல் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மாற்று ஆற்றலுள்ளோர் தினம்
……………………………………
மாற்று ஆற்றல் உடையோருக்கான சர்வதேச தினம் (டிசம்பர் -3) இன்றாகும்.
1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவிற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 03ம் திகதி உலகின் பல நாடுகளிலும், பல்வேறு பாடசாலைகளிலும் மாற்று ஆற்றல் உடையோருக்கான தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கமைவாக இன்று ஞாயிற்றுக் கிழமை யா/ கீரிமலை நகுலேஷ்வரா மகாவித்தியாலயத்தில் இவ் விழா சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் த.தயானந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் விசேட கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் தி.விஷ்ணுகரன் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விழாவில் மாற்று ஆற்றல் உள்ளோரின் கலை நிகழ்வுகளும், பல்வேறு போட்டிகளிலும் பங்குபற்றி தமது திறமையை வெளிக்காட்டிய மாற்று ஆற்றலுடைய மாணவர்களைக் கௌரவித்து பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
விழாவில் சிறப்பான முறையில் பாடசாலையின் மாற்று ஆற்றலுடையோரிற்கான அலகை நடாத்திவரும் பாடசாலை முதல்வர் பெற்றோர்களால் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.