அதிக நேரம் இன்டர்நெட் பயன்பாடு குறித்து வெளியாகியுள்ள செய்தி!

தவிர்க்கவே முடியாத, அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட டிஜிட்டல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கல்வி, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, அறிவுத்தேடல், வங்கி பரிவர்த்தனை, தகவல் தொடர்பு போன்ற பல பயன்பாடுகளுக்கு அடிப்படையாக இருப்பது இன்டர்நெட் ஆகும்.

ஒரு நாள் வாழ்வைக் கூட இந்த டிஜிட்டல் தொடர்பு இன்றி நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத சூழல் நிலவுகிறது.

ஆனால், இன்டர்நெட் பயன்படுத்துவதால் நம் மன நலன் பாதிக்கப்படும் என்று அவ்வபோது விவாதங்கள் எழுவது உண்டு.

அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களுக்கு நாம் அடிமையாகி வருகிறோம் என்றே பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், ஆக்ஸ்ஃபோர்டு இன்டர்நெட் இன்ஸ்டியூட், சர்வதேச அளவில் நடத்திய ஆய்வில், மனநலன் பாதிக்கப்படுவதில் இன்டர்நெட்டிற்கு பெரிய பங்களிப்பு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 15 வயது முதல் 89 வயது வரையிலான இரண்டு மில்லியன் தனிநபர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

உலகெங்கிலும் உள்ள 168 நாடுகளைச் சேர்ந்த இந்த மக்களுக்கு என்னென்ன காரணங்களால் மனநலன் பாதிக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வில் விவாதம் செய்யப்பட்டது. இதில் சமூக வலைதளங்களால் மன நலனுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும், சமூக வலைதளங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் பெரிய அளவுக்கு இல்லை என்ற சூழலில் இந்த ஆய்வு முடிவை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

பெண்களின் மனதை பாதிக்கும் இன்ஸ்டா:
அழகுக்குறிப்புகள், ஆடை அலங்காரங்கள், ஃபேஷன் உள்ளிட்டவற்றை மையப்படுத்திய ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் தளத்தில் நாம் பெருமளவிற்கு பார்த்திருக்க முடியும். இத்தகைய வீடியோக்கள், பெண்களின் மனதில் அவர்களுடைய உடல் அமைப்பு குறித்து எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றனவாம்.

இதுகுறித்து, பிரானிஸ் ஹாகென் என்னும் சர்வதேச சமூக நல ஆர்வலர் கூறுகையில், “கவலை மற்றும் மன அழுத்தம் அதிகரிப்பதற்கு இன்ஸ்டாகிராம் தான் காரணம் என்று இளம் வயதினர் குற்றம்சாட்டுகின்றனர். அனைத்து வயதினர் மத்தியிலும் இதே கருத்து நிலவுகிறது’’ என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரின் கவலை
இன்டர்நெட் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு காரணமாக இளம் வயதினரின் மனநலன் பாதிக்கப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் தமது கவலையை வெளிப்படுத்தினார்.

முன்னதாக, அமெரிக்காவின் அரசு மற்றும் கூட்டாட்சி சட்ட விதிகளை மீறியதாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கு அமெரிக்காவின் 33 மாகாணங்கள் நோட்டீஸ் அனுப்பின.

அதே சமயம், சமூக வலைதள நிறுவனங்கள் வரையறை செய்துள்ள விதிமுறைகள் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு ஆகியவை மக்களின் மனநலனை பாதிக்கவே செய்கிறது என்ற கருத்து பலமாக மேலோங்கி வருகிறது.

Recommended For You

About the Author: webeditor