மாவீரர் வாரம் ஆரம்பம்! நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திறந்து வைப்பு

மாவீரர் வாரம் ஆரம்பம்! நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திறந்து வைப்பு!!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (21.11.2023) ஆரம்பமானது.

இதனையொட்டி நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாரான சிவபாதம் இந்திரவதி ஏற்றிவைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி .வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

 

தொடர்ச்சியாக சிறுவர் சிறுமியர்களால் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை திரைநீக்கம் செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

1982 கார்த்திகை 27 முதல் 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் கிடைக்கபெற முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கி நினைவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகள், சிறுவர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN